உலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் (A Gun & a Ring)

A Gun & a Ring (துப்பாக்கியும் மோதிரமும்)

நேற்று மாலை The Gun And The Ring படம் பார்க்கக் கிடைத்தது. எம்மவர்களின் சினிமாத் தயாரிப்புக்களில் மிகவும் முக்கியமானதும், உயர்ந்த தரமுள்ளதுமான திரைப்படம் இது. 
ஈழத்தமிழர்களாலும் தென்னிந்திய சினிமாவை மிஞ்சும் வகையில் உலகத்தரமுள்ள படங்களை, மிகவும் சிறிய செலவில், எம்மவர்களின் நடிப்பில் படமாக்கும் திறமையுண்டு என்பதை இப்படம் நிரூபிக்கிறது.

ஆனால், தென்னிந்திய சினிமாவின் மதிமயக்கத்தில் கதாநாயகன், உடலைக்காட்டும் நாயகி, பஞ்ச் டயலாக், ஆடல் பாடல் காட்சிகள், வன்முறை, வக்கிரம், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டைஅர்த்த வசனங்கள் என்பவையே உலத்தரமான சினிமா என்று நினைக்கும் அறிவாளிகளுக்கான படம் இல்லை A Gun & a Ring என்ப‌து மட்டும் உண்மை.

இப்படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை, வில்லன் இல்லை, நகைச்சுவையாளர்கள் இல்லை. ஏன் விறுவிறுப்பு என்பதும் படத்தில் இல்லை. ஆனால் சிறந்ததெரு கதையும், அற்புதமான கதை நகர்த்தும் உத்தியும் உண்டு. படத்தின் முழுப்பலமே கதையை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் நகர்த்தியிருப்பதே. இயக்குனரிடம் அதீத திறமை இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு மோதிரமும், துப்பாக்கியும் சில மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் மையக்கரு.

வித்தியாசமான திரைப்படங்களின் ரசிகரா நீங்கள்? அப்படியாயின் உங்களுக்கான படம் இது. தவறவிடாதீர்கள்.

மனித மனங்களின் மெல்லிய உணர்வுகள், நிகழ்காலத்தை எட்டிப்பிடித்து மிரட்டும் கடந்தகாலம், குழந்தைகளை இழக்கும் இரண்டு குடும்பங்கள், வக்கிரமே இல்லாத ஓரினச்சேர்க்கை பற்றிய சிறு கிளைக் கதை, வாழ்க்கையில் பலதையும் இழந்த வேற்றின, வேற்றுநாட்டு மனிதர்கள் இருவர், ஒரு Pedophilia நோய்கண்ட மனிதன், அவ‌னைப் பின்தொடரும் புலனாய்வுப் போலீஸ், அந்த புலனாய்வுப் போலீசின் வாழ்க்கை, கணவனிடம் இருந்து பிரிந்து வேறு ஒருவனுடன் வாழும் பெண், அவளது கணவன் இப்படியாக மனிதர்களையும், அவர்களது மனப்‌போராட்டங்களையும் பின்னிப் பிணைந்ததே படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்தில் Blues தொனியிலான ஆங்கிலப் பாட்டு அருமையிலும் அருமை. பின்பு மிகவும் மெதுவாய் ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்தில் புரிந்துகொள்வதற்கு சற்று சிரமத்தைத் தந்தாலும் கதை நகர்த்தப்படும் முறை புலப்படஆரம்பிக்கும்போது கதை உங்களை உள்ளிளுத்துக்கொள்ளும் நிலைக்கு நகர்ந்துகொள்கிறது. கதையின் ஒவ்வாரு முடிச்சும் ஆங்காங்கே தொங்கிநிற்கும்போது ஏற்படும் அயர்ச்சிநிலையானது, அம் முடிச்சுக்கள் அவிள்கப்படும்போது அகன்று இப்படியும் ஒரு கதையை நகர்த்தலாமா என்ற ஆச்சர்யமான எண்ணத்தைத் தருகிறது.

கனடிய தமிழ்ப்பெண்ணாக வரும் பெண்ணின் காட்சிகளில் ஒருவித செயற்கைத்தன்மையை உணர்ந்தேன். இருப்பினும் சிறப்பான பாத்திரத்தேர்வுகளும், நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த வெளிநாட்டுமனிதனுக்கும், தமிழ்ப்பெண்ணுக்குமான நெருக்கமான உறவு மிளிரும்போதான உரையாடல்களின் வசனங்கள், தத்துவார்த்தமாக ஆழமான வாழ்க்கையனுபவங்களை பிரதிபலித்திருந்தால் அவர்களுகிடையிலாக உறவு நெருக்கமடைகிறது என்பதை மேலும் நம்பத்தகுந்ததாக்கலாம்.

இறுதிக்காட்சிகளின்போது தந்தைக்கும், புலனாய்வு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடலின் வசன அமைப்பும், காட்சியமைப்பும் படத்தின் முக்கிய காட்சிகள் என்பேன் நான். இரண்டு மனிதர்களின் மனப்போராட்டங்கள் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

இசையும், ஒளிப்பதிவும் மேலும் சிறப்பாக அமைந்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுவதை மறைப்பதற்கில்லை.

எது எப்படியாயினும் ஈழத்தமிழர்களின் பெயரை உலகத்தரத்தில் பேசவைத்த படம் இது என்றால் அது மிகையில்லை. 5 முக்கிய திரைப்படவிழாக்களில் தேர்வாகியிருக்கிறது இப்படம் என்பதே இப்படத்தின் சிறப்பினைக் கூறுகிறது. Lenin M. Sivam அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்க்களும்.

இப்படம் இந்நாட்களில்(27.04. 2014) ஒஸ்லோவில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. தவறவிடாதீர்கள்.

A Gun & a Ring போன்ற படங்களின் பாதையில் பயணிப்போமாயின் எங்களின் படங்களும் ‌பலராலும் கொண்டாடப்படும் நாள் தூரத்தில் இல்‌லை.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்